கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லும் முன்பாக இப்ப உனக்கு சந்தோஷமாக திவ்யா என ஆக்ரோஷமாக கூறிவிட்டு சிறைக்கு சென்றார் அர்னவ்.
கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை மதம் மாற கட்டாயப்படுத்துவதாகவும் திவ்யா புகார் கொடுத்தார்.
இதனால் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் அனைத்து மகளிர் போலீஸ்சார் அர்னவ்வுக்கு சம்மன் அனுப்பினார்கள். ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் 18-ம் தேதி ஆஜராவாதாவும் வக்கீல் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அர்னவ்வை கைது செய்தார்கள்.
மருத்துவ சோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்னவ்-க்கு வருகின்ற 28ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது. சிறைக்குச் செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அர்னவ் தான் எந்த தவறும் செய்யவில்லை. உண்மை ஒருநாள் நிரூபிக்கப்படும் என கூறினார். மேலும் என்னை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தாய், அதை செய்து விட்டாய். இப்போது சந்தோஷமா திவ்யா என ஆக்ரோஷமாக கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.