மதுபானக் கடைகளில் விற்பனை செய்யும் ஒவ்வொரு மது பாட்டில்களும் ரசீது கொடுக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என்று தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, தமிழக அரசின் முதுகெலும்பாக மதுபான கடை வருமானம் இருக்கிறது.
மதுபான கடைகளில் வாங்கும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் உரிய ரசீதுகளை வழங்கப்படுவதில்லை.மதுபாட்டில்களுக்கு நிர்ணயித்த விலையை விட பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்க படுகிறது. மேலும் மதுபான கடைகளில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் மது பாட்டில்களுக்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டும்.
மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும். போலி மதுபான விற்பனையை தடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள், மதுபான கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டில்களுக்கும் ரசீதுகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும்,மதுபான விலையை அரசு நிர்ணயித்த விலையை விட அதிகரித்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதனை கடையின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்யப்படும். இவைகள் அனைத்தையும் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.