அரண்மனைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் ஹென்சிங்டன் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் அரச குடும்பத்திற்கு சொந்தமான ஒரு அரண்மனையில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கதே மற்றும் மூன்று குழந்தைகள் வசித்து வருகின்றனர். மேலும் அதற்கு அருகில் பல நாடுகளின் தூதரங்கள் இருக்கின்றன. இதனால் எப்பொழுதும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை அடுத்து அவர் அங்குள்ள வங்கியில் புகுந்து பணத்தை திருடியுள்ளார். இதனை தொடர்ந்து அங்கிருந்து ஒரு காரில் ஏறி தப்பித்து சென்றுள்ளார். இதற்கிடையில் அருகில் இருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதிலும் அரண்மனையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த மர்ம நபர் ஒட்டி வந்த காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைக் கண்ட அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளார். இதனால் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். குறிப்பாக அரண்மனைக்கு அருகே இச்சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.