இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனான ஷிகர் தவான் தனிமைப்படுத்துதலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான 2- ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார் .
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அந்தப் பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் விதிப்படி 8 வீரர்கள் மீண்டும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .இந்த 8 வீரர்களில் ஷிகர் தவானும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இன்று இரவு நடைபெற உள்ள 2-வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்க போவது யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அணியின் துணை கேப்டனாக உள்ள புவனேஸ்வர் குமார் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.