Categories
உலக செய்திகள்

ஐபோன் பயனாளிகள் பாதிப்பு….! உலகையே உலுக்கிய “பெகாசஸ்”…. வழக்கு தொடர்ந்த ஆப்பிள் நிறுவனம்….!!

ஆப்பிள் நிறுவனம் பெகாசஸ் விவகாரம் தொடர்பில் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் செல்போன்களை “பெகாசஸ்” மென்பொருள் மூலம் ஒட்டு கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தங்களது பயனாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் என்எஸ்ஓ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் செல்போன்களை அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒட்டு கேட்டுள்ளதாகவும், ஸ்பைவேர் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பது குறித்த புதிய விவரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் என்எஸ்ஓ நிறுவனத்தின் மென்பொருள்களை முற்றிலும் தடை செய்வது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், பயனாளிகள் இனிவரும் காலங்களில் ஸ்பைவேர் தாக்குதலால் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதேசமயம் நூறு கோடிக்கும் அதிகமான ஐபோன்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் தனியுரிமை கொள்கைகளை பாதுகாக்கவும், இது போன்ற ஸ்பைவேர் தாக்குதல்கள் வாடிக்கையாளர்கள் மீது நடத்தப்படுவதை எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |