நாமக்கல்லில் சந்தேகிக்கும் படி நபர்களை கண்டால் 24 மணி நேரமும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என அம்மாவட்டத்தின் புதிய எஸ்பி பேட்டியளித்துள்ளார்.
நாமக்கல்லில் எஸ்பியாக வேலை பார்த்து வந்த அருளரசன் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட, ஈரோடு மாவட்டத்தில் எஸ்பியாக வேலை பார்த்து வந்த சக்தி கணேசன் தற்போது மாவட்டம் நாமக்கல் மாவட்டத்திற்கு எஸ்பியாக பொறுப்பேற்று உள்ளார். பொறுப்பேற்ற முதல் நாளே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் முதல் வரிசையில் காவல்துறையினர் தங்களது தொண்டினைச் செய்து வருகிறார்கள் எனவும் இடைவிடாது நீண்டுகொண்டே இருக்கும் இந்த கொரோனா பணியிலும் குற்ற சம்பவங்களை நடக்காமல் தடுப்பது, சட்ட ஒழுங்கை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளையும் காவல்துறையினராகிய நாங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது.
இதற்கு கண்டிப்பாக ஒரு குழு என்பது மாவட்டத்தில் செயல்பட வேண்டும். அந்தக் குழுவில் இருக்கக்கூடியவர்கள் தங்களது திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதற்கான செயல் முறையை நடைமுறைப் படுத்த உள்ளேன். அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்காக பொதுமக்களிடம் வீட்டின் முன்பு கேமராக்கள் அமைப்பது குறித்து விழிப்புணர்வு நடத்தப்படும். அதேபோல் சந்தேகம் வரும்படி யாரையேனும் பொதுமக்கள் கண்டால் உடனடியாக காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் தகவல் அளிக்கலாம் நீங்கள் அளிக்கும் தகவல் சரியா தவறா என்பதை நாங்கள் ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.