Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 15 நிமிடங்களில் முடிவு தெரியும் ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கியது!

டெல்லியில் இன்று முதல் விரைவு ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் கொரோனோவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் நாட்டிலேயே டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது. டெல்லியில் இதுவரை 47,102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 17,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 1,904 பேர் கொரோனோ பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இன்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்தார். இதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் ராதா சோமி சத்சங் பியாஸ் மையத்தில் இன்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த கெஜ்ரிவால்,

டெல்லியில் இன்று முதல் விரைவு ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். இந்த ஆன்டிஜென் கொரோனா சோதனை மூலம் 15 நிமிடங்களில் முடிவு தெரியும் என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா சோதனை கட்டணம் ரூ.2,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அளித்துள்ளார். மேலும் ராதா சோமி சத்சங் பியாஸ் மையம் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், சுமார் 10,000 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |