பாகிஸ்தான் கொரோனா தொற்று நெருக்கடியிலும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவி சோதனையை மேற்கொண்டுள்ளது
உலகமுழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் பாகிஸ்தானில் வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்நாட்டில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து பலியானவர்கள் எண்ணிக்கையும் 250-ஐ கடந்துவிட்டது. இதனால் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசாங்கம், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பொருளாதார பிரச்சினையை சீர் செய்ய சர்வதேச நிதியமும் அமெரிக்காவும் அந்நாட்டிற்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது.
இந்த நெருக்கடியான சூழலில் நேற்று பாகிஸ்தான், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. அரபிக்கடல் பகுதியில் இந்த சோதனையானது நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்தது. இதுதொடர்பாக கடற்படை செய்தித் தொடர்பாளர் அர்ஷித் ஜவத் கூறுகையில், “ஹெலிகாப்டர்கள் மற்றும் போர்க் கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கடலில் வைக்கப்பட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அளித்துள்ளது.
இந்த ஏவுகணைகள் அதிநவீன தொழில் நுட்பத்துடனும், வான் பயண மின்னணுவியல் தொழில்நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடலில் இருக்கும் இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கும் வல்லமை படைத்ததாகும்” என தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை சோதனை கடற்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதி முன்னணியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கடற்படை தளபதி ஜாபர் மஹ்மூத் அப்பாசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் “நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை ராணுவத்தின் தயார் நிலைக்கும் கடற்படையின் செயல்பாட்டு திறனுக்கும் ஒரு சான்றாகும். எதிரிகளின் ஆக்கிரமிப்பிற்கு சரியான முறையில் பதிலளிக்க பாகிஸ்தான் கடற்படை அதிக திறன் கொண்டது. எந்த ஒரு சூழ்நிலையிலும் தாய் நாட்டையும் அதன் நீர்நிலைகளையும் பாகிஸ்தான் கடற்படை பாதுகாக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.