தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முதியவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4ம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 58வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் கொரோனா சிகிச்சை பலனளிக்காமல் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழப்புகள் 88 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றும் தமிழகத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.