சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தற்போது விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிரீன் லைன் மற்றும் ப்ளூ லைன் வழிதடத்தில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து ரயில் சேவைகள் இயங்கி வரும் நிலையில் ஆரஞ்சு லைன், ரெட் லைன் மற்றும் பர்பிள் லைன் வழிதடத்தில் 2-ம் கட்ட திட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. இந்த 2-ம் கட்ட பணியில் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் ரயில் சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது.
இதில் மாதவரம் அருகே சுரங்கப்பாதை வழியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கப்பட இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு சுரங்க பாதைகள் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பால்பண்ணை அருகே 1.4 கிலோமீட்டர் தூரத்திற்கு பூமியில் துளையிடுவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், ஒரு நாளைக்கு 10 மீட்டர் ஆழத்திற்கு துளை இடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 140 நாட்களில் 80 அடி ஆழத்திற்கு தோண்ட முடியும்.
இது குறித்து சிஎம்ஆர்எல் மேலாண்மை இயக்குனர் ஏ. சித்திக் கூறியதாவது, துளையிடும் இயந்திரத்தின் வால் பகுதி 100 மீட்டர் நீளம் இருப்பதால் பூமிக்குள் முழுமையாக நுழைந்து துளையிடும். இந்த பணிகள் முடிவடைவதற்கு எப்படியும் மாதக்கணக்கில் ஆகிவிடும். இந்த பணிகள் முடிவடைந்த பிறகு கிரீன்வேஸ் ரோடு பகுதியில் குழி தோண்டும் பணிகள் நடைபெறும் என்றார். மேலும் திட்டத்தின் இயக்குனர் டி. அர்ஜுன் கூறுகையில், கெல்லிஸ் முதல் தரமணி வரை பாறைகள் அதிக அளவில் இருப்பதால் குழி தோண்டும் பணிகள் சற்று சவாலாக இருக்கும். இருப்பினும் நாங்கள் சிறப்பான முறையில் அந்த பணியை செய்து கொடுப்போம் என்றார்.