பிரிட்டனில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் வருமானம் இல்லாமல் தவித்து வரும் சம்பவம் கண்கலங்க வைக்கிறது..
உலக நாடுகளை அச்சத்தில் உறைய வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நாளுக்கு நாள் அதன் வேகத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டன் 6ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பிரிட்டன் எஸெக்சை (Essex ) சேர்ந்த 53 வயதான ஜியோவானி சாபியா (giovanni sapia) என்பவர் இம்மாத தொடக்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவரது இதயம் 25% மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், அவரது 35 வயதான மனைவி அண்ணா சாவெங்கோ (anna savchenko), வீட்டில் தனியாக தனது 4 குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வெண்டிலட்டரில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கணவரை பார்க்க முடியாமல் குழந்தைகளுடன் அவர் போராடி வருகின்றார்.
குடும்பத்தில் கணவர் மட்டுமே வேலைக்கு செல்பவர் என்பதால், தற்போது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமலும், குழந்தைகளுக்கு சாப்பிட உணவு கொடுக்க முடியாமலும் திணறி வருகிறார் அந்த பெண். இதனால் அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் இணைந்து அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக நன்கொடை வசூலிக்க ஏற்பாடு செய்திருக்கின்றனர்.