கோபித்து சென்ற மாணவி வீட்டுக்கு வராத காரணத்தினால் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, செல்லூர் அகிம்சாபுறம் 8-வது தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரும், திருமங்கலத்தை சேர்ந்த அபிநயா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவனேசன் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் உள்ளனர். போட்டோகிராபராக ஜெய்சந்திரன், மார்க்கெட் பகுதியில் ஒரு ஸ்டூடியோ நடத்தி வருகிறார். மேலும் தொழிலை விரிவுபடுத்த மனைவிக்கு தெரியாமல் சுமார் 5 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். பணத்தை சரியாக திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
மேலும் ஜெயச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் பணத்தில் மது அருந்தி வந்துள்ளார். சம்பவ தினத்தன்று அபிநயா கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு திருமங்கலத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வருமாறு போன் மூலம் ஜெயச்சந்திரன் பலமுறை அழைத்தும் அவர் வீட்டிற்கு வர மறுத்துவிட்டார். மனவருத்தம் அடைந்து ஜெயச்சந்திரன் குளிர்பானங்களில் பூச்சி மருந்தை கலந்து தனது இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது 2 வயது பெண் குழந்தை ரித்திகா இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். ஆபத்தான நிலையில் ஜெயச்சந்திரன், அவரது மகன் சிவனேசன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செல்லூர் போலீஸ் குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை செய்ததற்காக ஜெயச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.