பிரபல நடிகை ஆண்ட்ரியா இந்தியாவிலேயே கடல் கன்னியாக நடிக்கும் முதல் நடிகை என்ற பெருமையை அடைகிறார்.
பிரபல நடிகையும், பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் நடிப்பில் தொடர்ந்து வெளியாகி வரும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வசூலிலும் வென்றது.
நடிகை ஆண்ட்ரியா தற்போது பிசாசு2, கா, நோ என்ட்ரி, வட்டம், மாளிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே கடல் கன்னியாக நடிக்கும் முதல் நடிகை என்ற பெருமையை ஆண்ட்ரியா அடைகிறார்.
மேலும் இப்படத்தில் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படத்திற்காக சென்னையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருச்செந்தூர் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் இந்த படத்தை வரும் சம்மரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.