சத்தீஸ்கர் மாநிலத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்த 7 தொழிலாளர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இதனை சுத்தப்படுத்தும் பணியில் இன்று 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி 7 பேர் ஆலையின் உள்ளே மயக்கம் அடைந்து விழுந்தனர்.
பின் இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு உள்ளே சென்று அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்றோர் சாதாரண பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஊரடங்கு காலகட்டத்தில் பல நாள் திறக்கப்படாமல் இருந்து நீண்ட நாளுக்கு பிறகு சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டதால் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.