“ஒமிக்ரான்” வகை வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
“ஒமிக்ரான்” மாறுபாடடைந்த வைரஸ் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் சுகாதார நிபுணர்கள் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் சமூகப் பரவலாக மாறி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். மேலும் ஒமிக்ரான் பாதிப்பில் இந்தியாவின் தலைநகரான டெல்லி இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.
அதேபோல் டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்த நிலையில் மாறுபாடடைந்த மற்றொரு புதிய வகை வைரஸ் பரவி உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொரோனாவின் இரட்டை மாறுபாடு அடைந்த டெல்மிக்ரான் (Delmicron) என்ற புதிய வகை வைரஸ் தற்போது பரவ தொடங்கியுள்ளது.
இந்த புதிய வகை வைரஸின் பெயரானது கொரோனாவின் மாறுபாடு அடைந்த ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ்களின் பெயரை இணைத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸிலிருந்து உருமாறிய “டெல்மிக்ரான்” புதிய வகை வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்த உள்ளதாக கோவிட் பணிக்குழு உறுப்பினர் ஷஷாங்க் ஜோஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் இந்தியாவில் தற்போது பரவி வரும் டெல்டா டெரிவேடிவ்கள் முக்கியமான வைரஸ் வகைகளாக கருதப்படுகிறது. ஆனால் உலகின் பிற பகுதிகளில் டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா டெரிவேட்டிவ் வைரஸ்கள் எவ்வாறு செயல்படும் என்பதை கணிக்கவே இயலவில்லை என்று ஷஷாங்க் ஜோஷி கவலை தெரிவித்துள்ளார்.