72 வயது முதியவர் சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை சைக்கிள் மூலமாகவே பயணம் மேற்கொண்டு வந்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பிழைப்பிற்காக பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னை வந்தவர்கள் மாட்டிக்கொண்டார்கள். போக்குவரத்து தடைபட்டதால் அவர்களால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் பலரும் இ பாஸ் அப்ளை செய்து தங்களது சொந்த ஊருக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்தனர்.
அதன்படி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 72 வயதான முதியவர் தொடர்ந்து இ பாஸ் அப்ளை செய்துள்ளார். ஆனால் அவருக்கு இ பாஸ் கிடைக்காத விரக்தியில் சைக்கிள் மூலமாகவே சுமார் 700 கிலோமீட்டர் ஒரு வாரம் பயணம் மேற்கொண்டு, சொந்த ஊர் திரும்பினார். இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, முடிவில் நெகட்டிவ் வந்த நிலையில், வீட்டின் அருகே இருக்கக்கூடிய கோவில் ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு பிறகு வீடு திரும்பியுள்ளார். 72 வயதில் முதியவர் சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை சைக்கிள் மூலமாகவே பயணம் மேற்கொண்டு வந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.