போலந்தில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் தைரியமாக துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
போலந்து நாட்டில் பிங்க்ஸின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி வைத்திருக்கிறார். இந்த அங்காடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் முகமூடி அணிந்து கொண்டு வந்த கொள்ளையன் ஒருவன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளான். அப்போது அந்த மூதாட்டி அவனை பார்த்ததும் துப்பாக்கியை நீட்டி மிரட்டியுள்ளான். ஆனால் அந்த மூதாட்டி பயப்படாமல் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் துடைப்பத்தால் அந்தக் கொள்ளையனை மாங்கு மாங்கென்று அடித்தார்.
அடி வாங்கினாலும் கொள்ளையன் பணத்தை எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளான். விடாப்பிடியாக இருந்த கொள்ளையனை அந்த மூதாட்டி தொடர்ந்து தாக்கியதும்,ஒரு கட்டத்தில் அந்தக் கொள்ளையன் நிலை குலைந்து போய் அங்கிருந்து ஓடி விட்டான். தற்போது இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மூதாட்டியின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.