Categories
தேசிய செய்திகள்

ஹலோ அமித் ஷா பேசுற….சிக்கிய விமானப்படை அலுவலர்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா போல் ஆளுநரிடம் பேசிய விமானப்படை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டரான குல்தீப் பகேலா, டெல்லியில் உள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார்.

அவரது நண்பரான சந்தரேஷ் குமார் சுக்லா பல் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி காலியாக உள்ள நிலையில் அப்பதவிக்காக சந்தரேஷ் குமார் விண்ணப்பித்துள்ளார்.

பதவியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கில் தனது நண்பர் குல்தீப் பகேலாவிடம் தனது ஆசையைத் தெரிவித்துள்ளார்.

பெரிய மனிதர் பரிந்துரை இருந்தால் நிச்சயம் பதவியைப் பெற்றுவிடலாம் என இருவரும் முடிவு செய்ய அதற்காக விபரீத முயற்சியில் களமிறங்கினர்.

துணை வேந்தர் பதவியை அம்மாநில ஆளுநர்தான் தீர்மானிக்க முடியும் என்பதால் ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பரிந்துரை செய்ய வைத்தால் என்ன என்று திட்டம் போட்ட நண்பர்கள், அவர்களே அமித் ஷா போல் பேசி நாடகமாடியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டான்டனுக்கு தொலைபேசி மூலம் அழைத்த விமானப்படை கமாண்டர் பகேலா அமித் ஷா போல் பேசி தனது நண்பரை துணை வேந்தர் பதவியில் அமர்த்துமாறு பேசியுள்ளார்.

இருப்பினும் ஆளுநர் மாளிகைக்கு சந்தேதம் வரவே விசாரணையில் இது போலி அழைப்பு எனத் தெரியவந்துள்ளது. பின்னர் இவ்விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு விசாரணைப் பிரிவு இந்த அழைப்பை மேற்கொண்டது விமானப்படை கமாண்டர் குல்தீப் பகேலாதான் எனக் கண்டுபிடித்துள்ளது.

பின்னர் சிறப்பு விசாரணைப் படையின் கூடுதல் காவல்துறை தலைவர் அசோக் அஸ்வதி தலைமையிலான காவல்துறை பிரிவி கமாண்டர் குல்தீப் பகேலாவையும், அவரது நண்பர் சந்ரேஷ் குமார் சுக்லாவையும் கைது செய்துள்ளது.

Categories

Tech |