சகோதரியின் கல்லறை மீது மற்றொரு சடலம் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெசிகா தவில். இவர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜெசிகாவின் சகோதரி இறந்துவிட்டார். இதனால் அங்கு உள்ள இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் ஜெசிகா தனது சகோதரியின் கல்லறைக்கு அடிக்கடி சென்று பார்ப்பது வழக்கம். அது போன்று ஒரு முறை சென்று பார்க்கும் பொழுது அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அவரின் சகோதரியின் கல்லறை மீது வேறு ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.
இது ஜெசிகாவுக்கும் அவரின் தந்தைக்கும் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. இது குறித்து ஜெசிகா கூறியதில் “நான் எனது சகோதரியின் கல்லறையைப் பார்க்க சென்றேன். அங்கு என் சகோதரியின் மேல் வேறொருவரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நாங்கள் என் சகோதரியை புதைப்பதற்காக 12,000 டாலர் வழங்கியுள்ளோம். ஆனால் இடுகாடு ஊழியர்கள் இதுபோன்ற ஒரு செயலை செய்துள்ளனர்.
நாங்கள் இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு புதைக்கப்பட்ட மற்றொரு சடலத்தை அவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். இருப்பினும் என் சகோதரியின் கல்லறையின் மேல் புதைக்கப்பட்டிருந்த மார்பில்ஸ் கற்கள் உடைந்து மோசமாக காட்சி அளிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜெசிகா மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கறிஞர் மூலமாக கல்லறை இடுகாட்டு நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.