அமெரிக்காவில் இருந்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அந்நாட்டில் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று மதியம் நிலவரத்தின் படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 104 என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இது பற்றி ஒபாமா ஆட்சிக்காலத்தில் வெள்ளை மாளிகையின் எபோலா வைரஸ் தடுப்பு நிபுணராக இருந்த ராப் கிளெயின் தனது கருத்துக்களை கூறும் போது, “பூமியில் மிகவும் மோசமான பலி எண்ணிக்கையை அமெரிக்கா தற்போது கண்டிருக்கிறது. நீங்கள் வேறு எந்த நாட்டிலும் இருப்பதைவிட அமெரிக்காவில் இருந்தால் கொரோனாவால் உயிர் இழக்கிற அபாயம் அதிகமாக இருக்கும்” என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் தற்போது வரை 48 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கொரோனா பிடியில் சிக்கியுள்ளனர்.