Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலி…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. மருத்துவ உதவியாளர்களுக்கு குவியும் பாராட்டு….!!

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்தியாபுரம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் பிரசவத்திற்காக இளையநயினார் குளத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் ஐஸ்வர்யாவை உடனடியாக மீட்டு திசையன்விளை 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் கும்பிளம்பாடு அருகில் சென்று கொண்டிருந்த போது ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் டிரைவர் கல்யாணசுந்தரம் ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தினார். அதன்பின் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ராஜேஷ்வரி ஐஸ்வர்யாவுக்கு பிரசவம் பார்த்தார். இந்த பிரசவத்தில் ஐஸ்வர்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் தாயும், குழந்தையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Categories

Tech |