மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட நிற்பவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து அழுகிய நெற்பயிர்கள் உடன் தப்படித்தும் ,ஒப்பாரிவைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
நாகை, கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.புயல் மற்றும் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனை கண்டித்தும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 32,000 நிவாரணம் வழங்கக்கோரியும், வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது என்று கோஷங்களை எழுப்பினர். பல்வேறு பகுதிகளில் இருந்து நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர். ஆர்ப்பாட்டம் காரணமாக துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.