வடக்கு அந்தமான் கடல், அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறவுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, தென்கிழக்கு வங்கக் கடல், அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு- வடகிழக்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடக்கு அந்தமான் கடல், அதையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த தாழ்வுமண்டலம் அந்தமான் நிகோபா் தீவு-போா்ட்பிளேரில் இருந்து 140 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இது மேலும் வலுடைந்து புயலாக மாற இருக்கிறது. இப்புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய “அசானி” என்று பெயரிடப்படுகிறது. இது வடக்குதிசையில் நகா்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் மியான்மா் கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதனால் மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய மியான்மா் கடலோரப் பகுதிகள், அதனையொ ட்டிய தென்கிழக்கு, வடகிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கதேச கடலோரப் பகுதியில் மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 85 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். ஆகவே இப்பகுதிகளுக்கு மீனவா்கள் மாா்ச் 23-ஆம் தேதி வரை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.