இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவித்தது. இதற்கான காலகெடு பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதிக்கு முன்பாக ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செயல்படாது என்று வருமானவரித் துறை எச்சரித்துள்ளது. அப்படி பான் எண் செயல்படாமல் போனால், அந்த நபரால் வருமானவரி தாக்கல் செய்ய முடியாது. ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் ரிட்டர்ன்களும் தாக்கல் செய்யப்படாது. நிலுவைத் தொகைகளும் திரும்ப வழங்கப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.