பணியிடைமாற்றம் செய்த வேதனையினால் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் விழுப்புரம் to காட்பாடி வரை செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு சென்றதும் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட அவர்களும் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கலசம் பாகத்தை அடுத்த வில்வராணி நகரை சேர்ந்த சரவணன் என்பதும் அவர் திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக சரவணன் வேறொரு மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன வேதனையினால் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி பின் மயக்க நிலையில் இருந்த சமயத்தில் நள்ளிரவு அல்லது அதிகாலையில் ரயிலில் அடிபட்டு அவர் இறந்திருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த விரிவான விசாரணையை தற்போது காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.