லாரி டியூப்பில் சாராயம் கடத்திய தந்தை-மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமன் என்னும் ஒரு மகன் உள்ளார். சுமன் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை-மகன் இருவரும் மினி லாரியின் டியூப்பில் சாராயம் கடத்திச் சென்றுள்ளனர்.
புதுப்பாலப்பட்டு தத்துக்காடு சோதனை சாவடி அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கராபுரம் போலீசார் மினி லாரியை மடக்கி பிடித்தனர். அதன்பின் லாரியை சோதனை செய்த போலீசார் லாரி டியூப்பில் கடத்தப்பட்ட 250 லிட்டர் சாராயத்தை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சங்கராபுரம் காவல்துறையினர் தந்தை-மகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பின் கைது செய்தனர்.