மகாராஷ்டிராவில் கொரோனா லாக் டவுனின் போது மதுபானங்களை கடத்தியதாக இதுவரை 1221 வழக்குகள் பதிந்த்துள்ளன. மேலும், ரூ .2.82 கோடி மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளது. கலால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மதுபானம் கடத்தியதாக இதுவரை 472 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்ட விரோதமாக மதுபானங்களை ஏற்றிச் சென்றதாக 36 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 28 பேருக்கும், தானே மாவட்டத்தில் 15 பேருக்கும், அமராவதியில் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட்டில் தலா ஒருவருக்கும், புனேவில் 2 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல்2ம் தேதி அமராவதியில் 45 வயது நிரம்பிய நபர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததன் காரணம் குறித்து மருத்துவர்கள் சோதனை நடத்தினர். அந்த சோதனை அறிக்கையின் படி, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமராவதி மாவட்ட ஆட்சியர், ஷேலேஷ் நவால் தெரிவித்துள்ளார்.