மது மற்றும் சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் சரங்கத்திற்கு உட்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் கடைவீதியில் உள்ள ஒரு கீற்று கொட்டகையில் மது மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் கொட்டகைக்குள் 175 மது பாட்டில்கள், 50 லிட்டர் சாராயம் மற்றும் 32780 ரூபாய் ரொக்கப் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மது மற்றும் சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அன்பரசன், சேகர் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள், சாராயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.