வேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொரோனா சிகிச்சையாளர்கள் ஆக்சிஜன் வசதிக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒரே நாளில் 300 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களில் 13 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் லாரிகளில் கொண்டு வரப்பட்டு, நிரப்பு கிடங்குகளில் சேமித்து கொரோனா சிகிச்சையாளருக்கு தேவைப்படும் நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.