நீர் வழித்தடங்களில் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கோபி பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி குளம், குட்டைகளை சென்றடைகிறது. இந்நிலையில் வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து படர்ந்து வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக நீர் வழித்தடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓட முடியாமல் தடை ஏற்படுகிறது.
இதனால் மழைநீர் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து விடுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள குளத்தில் கழிவுநீர் கலப்பதுடன், மழைநீரில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கிக் கிடக்கின்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. ஆகவே நீர் வழித்தடங்களில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் குளத்தில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.