பெங்களூருவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 10 லட்சம் மோசடி செய்த நபரை கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு குரு ராகவேந்திரா என்ற பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனியார் திருமண தகவல் மையம் மூலம் லண்டனில் வசிக்கும் பிரேம்பசு என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அப்பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வருவதாக அந்த நபர் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
மறுநாள் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் அந்தப் பெண்ணின் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். இதையடுத்து பிரேம்பசுவிடம் கொரோனா பரிசோதனை அறிக்கை எதுவும் இல்லை என்றும், அவரிடம் இரண்டு கோடி மதிப்பில் பொருள்கள் உள்ளதால் அதற்கான வரிப்பணம் 10 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி கொடுத்தால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் அதிகாரி கூறிய வங்கி கணக்கிற்கு 10 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பிறகு பிரேம்பசு மற்றும் அதிகாரி எனக் கூறிய நபரின் செல்போனுக்கு அழைத்தபோது இருவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் 10 லட்சம் ரூபாயை இழந்ததை உணர்ந்த பின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.