ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்த நிலையில் கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கேரளா மாநிலத்தில் ஏர்இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையும், அதனால் அப்பாவி மக்கள் உயிர் இழந்த செய்தியையும் கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இத்தகைய நேரத்தில் துயரம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கடவுள் வலிமை அளிப்பார்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.