கரூர் மாவட்ட அதிமுக உறுப்பினர் திருவிக என்பவர் இன்று திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்து அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கார் கண்ணாடியை உடைத்து திருவிக என்பவரை கடத்தியுள்ளனர். இவர் கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். அந்த சமயத்தில் திருவிக கடத்தப்பட்டது அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.
அப்போது திமுக கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் அங்கு வந்ததால் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவருக்கொருவர் மாறி மாறி செருப்பு வீசி மோதலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் தனித்தனியாக பிரித்து போலீசார் உதவியுடன் கயிறு கட்டி நிறுத்தி வைத்தார். மேலும் இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.