அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்த இரண்டு மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்ய விடமால் தடுத்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இன்று மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்குமாறு இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக் கொண்டது. ” ஒயிட் அலர்ட் ” என்ற அடையாள போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று காலை போராட்டம் நடைபெற்றது. இதனிடையே மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் உரையாடினார்.
அமித்ஷாவுடன் அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் காணொலியில் பங்கேற்றார். அப்போது மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும், மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் என அமித்ஷா கேட்டுக்கொண்டார். இந்த பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.