சொத்துக்காக கணவன் மாமனார் மைத்துனர் ஆகியோரைக் கொலை செய்த பெண் மாமியாரை கடத்தி கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு உடந்தையாக இருந்த குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான்.
சென்னையில் உள்ள படப்பை பகுதியை சேர்ந்தவர்கள் சுப்புராயன்-பத்மினி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு செந்தில் மற்றும் ராஜ்குமார் என இரண்டு மகன்கள் இருந்த நிலையில், சொத்து தகராறினால் கடந்த 2014ஆம் வருடம் செந்தில் தனது சகோதரர் ராஜ்குமாரை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அதன் பிறகு வெளியில் வந்த செந்தில் தலைமறைவாகினர். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது மனைவி மேனகா தனது தோழியின் வீட்டில் தங்கி வந்தார். இந்நிலையில் மேனகா 2018 ஆம் ஆண்டு தனது தோழியின் கணவரான ராஜேஷ் கண்ணாவை வைத்து மாமனார் சுப்பராயனை கொலை செய்தார்.
அதன் பின்னர் பல கோடி சொத்துக்களை கையில் வைத்திருந்த மாமியாரை மிரட்டி சொத்துக்களை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த மாமியார் பத்மினி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கும் அவரை விடாமல் பின் தொடர்ந்து சென்ற மேனகா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பத்மினியை கடத்தியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்றதை அடுத்து மேனகா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஜேம்ஸ், பாலமுருகன், கமலா, தர்மலிங்கம், ரோஸி ஆகியோரை கைது செய்தனர். அதோடு மேனகாவிற்கு உதவியாக இருந்து கொலை மற்றும் கடத்தலுக்கு மூளையாக இருந்த அவரது தோழி கணவர் ராஜேஷ் கண்ணாவை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு கள்ளக்குறிச்சியில் ராஜேஷ்கண்ணா பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. சொத்துக்காக ராஜ்குமாரை கொலை செய்த செந்தில் சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு மேனகாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜேஷ்கண்ணாவிடம் தகராறு செய்துள்ளார். இதனை தொடர்ந்து மேனகாவின் தந்தையிடம் சென்று செந்தில் புகார் அளித்துள்ளார். இதனால் செந்திலுக்கும் அவரது மாமனாருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.
எனவே மேனகா, ராஜேஷ்கண்ணா மற்றும் மேனகாவின் தந்தை அருண் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து செந்திலை கொலை செய்ய முடிவு செய்து குறிப்பிட்ட பகுதிக்கு அவரை வரவழைத்தனர். அங்கு வந்த செந்திலை துண்டு துண்டாக வெட்டி ஒரு இடத்தில் புதைக்கவும் செய்துள்ளனர் இதுவரை செந்தில் கொலை செய்யப்பட்டது குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் ஒரே ஒருமுறை மட்டும் மேனகா தனது கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார் செந்திலும் மரணமடைந்த நிலையில் பத்மினிக்கு ஆதரவாக யாரும் இல்லை என்பதால் மேனகா தனது மாமியாரிடம் இருந்து சொத்துக்களை அபகரிக்க நினைத்து நினைத்து அவரை கடத்தியுள்ளார்.