புதிய தொழிற்சாலையை அமைக்கப்போவதாக அமெரிக்கா தடுப்பூசி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகளும் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதனை ஊக்குவிப்பதற்காக இலவச தடுப்பூசி மையங்கள் அமைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. அதிலும் ஆப்பிரிக்காவில் மிகக் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் ஐ.நா.சபையின் ‘கோவேக்ஸ்’ திட்டத்தின் படி தடுப்பூசி ஏற்றுமதியானது குறைந்துவிட்டது. இதனால் அங்கு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆப்பிரிக்காவில் தடுப்பூசி ஆலைகளை அமைப்பதற்காக பைசர், பையோ என்டெக் போன்ற தடுப்பூசி நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா உயிரி தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா ஆப்பிரிக்காவில் மருந்து தயாரிப்பு ஆலையை துவக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து மாடர்னா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ஆப்பிரிக்காவில் தடுப்பூசி தயாரிக்கும் ஆலை ஒன்றை 500 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் அமைக்கப் போகிறோம். இந்த நிறுவனமானது அமெரிக்காவில் உள்ளதை போன்றே அனைத்து உயர்தர வசதிகளுடனும் அதீத திறனுடனும் இருக்கும். குறிப்பாக ஆண்டொன்றிற்கு 50 கோடி தவணை தடுப்பூசிகளை உற்பத்திசெய்வதாக குறிக்கோள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலை நிறுவுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அதில் உள்ளூர் மக்களே அதிகளவில் பணியமர்த்தப்படுவார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.