குடியிருப்பு பகுதியில் திடீரென குண்டுகள் விழுந்து வெடித்ததால் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தில் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும் ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து மூண்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் நிம்ருஸ் மாகாணம் காஷ் ரோடு பகுதியில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தாக்குதலை நிகழ்தியது. அந்த சமயத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் குண்டுகள் விழுந்து வெடித்ததால் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 15 பேரும் ஒரே குடும்பத்தினர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் ராணுவம் இந்த வான் தாக்குதலை குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளரான ஷியா வடான் என்பவர் நேற்று காலை காரில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென கார் வெடித்ததில் அவரும் அவருடன் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.