ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் பிரிட்டன் ராணுவத்திடம் பயிற்சி மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கமாண்டோக்கள் மீண்டும் ஒன்றிணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான் போராளிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை திட்டமிட்டு அதிரடியாக கைப்பற்றி விட்டார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றி, கடைசியாக தலைநகர் காபூல் நகரில் புகுந்தனர். அதன்பின்பு ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற வளாகம் என்று ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி விட்டார்கள்.
எனவே, தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சிய மக்கள் அங்கிருந்து தப்பித்து வருகிறார்கள். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் அங்கிருக்கும் மக்களை நாட்டிலிருந்து வெளியேற்ற உதவி செய்து வருகிறது. நாட்டின் பல மாகாணங்கள் தலிபான்களிடம் சரணடைந்து விட்டது. இந்நிலையில், தலைநகர் காபூலில் இருந்து 80 மைல் தூரத்தில் இருக்கும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் பிரிட்டன் ராணுவத்திடம் பயிற்சி மேற்கொண்ட கமாண்டோக்கள் தங்கள் நாட்டின் ராணுவத்தினரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தலிபான்களை எதிர்த்து போரிட தைரியம் உடைய ராணுவ வீரர்கள் அல்லது போராளிகள் அனைவரையும், பஞ்ஷிர் பள்ளத்தாக்கு வரவேற்பதாக கூறியுள்ளனர். மேலும், தங்களின் இறுதி துளி ரத்தம் சிந்தும் வரை தலிபான்களை எதிர்த்து போரிடுவோம் என்று கூறியுள்ளார்கள். இதுமட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை ஜனாதிபதியான, அம்ருல்லா சலே, இவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன், தான் எப்போதும், எந்த நிலையிலும் தலிபான் அமைப்பிற்கு தலை வணங்க மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.
மேலும் இவர், மிகவும் சிறந்த கமாண்டோக்கள் ஆயிரம் பேர் தங்களிடம் உள்ளதாகவும், பலரும் தங்களுடன் சேர காத்திருக்கிறார்கள் என்றும் உள்ளூர் மக்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.