இந்திய அணிக்கு அஸ்வினின் அனுபவம் உதவியாக இருக்கும் என முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார் .
டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் தோல்வியடைந்தது. இதனிடையே நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகின்றது. அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் வீரர் பிரட் லீ கூறும்போது,” தற்போது இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினின் அனுபவம் தேவை “என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,” அஸ்வின் பல டி20 போட்டிகளில் விளையாடி இருப்பதால் அவருடைய அனுபவம் அணிக்கு உதவியாக இருக்கும் .எனவே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அஸ்வினை களமிறக்க வேண்டும் “என அவர் கூறியுள்ளார் .இதற்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.