Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்த மூதாட்டி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரியம்பாளையத்தில் சின்னச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள்(65) என்ற மனைவி இருக்கிறார். கடந்த 31-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மூதாட்டி செல்லம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மூதாட்டியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவர் அணிந்திருந்த தங்க கம்மல்களை கத்தியால் காதை அறுத்து பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதனால் படுகாயமடைந்த மூதாட்டி செல்லம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற வாலிபரை வலைவீசி தேடிவந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சித்தோடு ராயர்பாளையத்தை சேர்ந்த தொழிலாளியான தனபால் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மூதாட்டியின் கம்மலை பறித்துச் சென்றது நான்தான் என்று தனபால் ஒப்புக்கொண்டார். அதன்பின் தனபாலை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த 2 கம்மல்களையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு செல்லம்மாளின் கம்மல்களை பறித்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பாராட்டு தெரிவித்தார்.

Categories

Tech |