ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காயல்நத்தம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் கூலி தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு 16 வயதுள்ள பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவரது குடும்பத்தினர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். எனவே தற்போது பள்ளிகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பிரசாந்த் ஆடு மேய்க்க சென்று வந்துள்ளான். இதனால் பிரசாந்த் தினசரி காலையில் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு மீண்டும் மாலை வேளையில் வீடு திரும்புவார். ஆனால் வழக்கம் போல் ஆடுகளை மேய்க்க சென்ற பிரசாந்த் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் காட்டுப் பகுதிக்கு சென்று தேடி பார்த்துள்ளனர்.
அப்போது காட்டுக்குள் ஒரு பாறையின் கீழ் காயங்களுடன் பிரசாந்த் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பிரசாந்த் உடலில் இருந்த காயங்களை பதிவு செய்த பின் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் உயிர் இறந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.