செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, ஸ்டாலின் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவிலே காலை சிற்றுண்டியாக மாணவர்களுக்கு உணவு அளித்திருக்கிறார். குழந்தைகளுக்கு உணவு அளிப்பது என்பது வரவேற்க வேண்டியது தான். ஆனால் ஆத்மார்த்தமாக அந்த வேலையை செய்தாரா என்று சொன்னால் நிச்சயமாக இருக்காது என்று கருதுகிறேன். காரணம் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்.
அப்படி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளால் தான் எங்களுக்கு விழ வேண்டிய குறிப்பிட்ட சதவீத வாக்குகள் மாறி அவர்களுக்கு விழுந்த காரணத்தினால் முதலமைச்சர் பொறுப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. அப்படி மாறி விழுந்த வாக்காளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நமக்கு கிடைக்கும் என பெண்கள் வாக்களித்து இருக்கிறார்கள்,
சிலிண்டருக்கு 100 ரூபாய் கிடைக்கும் என பெண்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அதேபோல மாணவர்கள் கல்வி கடன் ரத்து செய்வார்கள் என்று அந்த பெற்றோர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இப்படி எல்லாம் வாக்களித்து வெற்றி பெற செய்த அவர்களை ஏமாற்றிவிட்டு, இப்பொழுது ஏதோ நானும் செய்கிறேன் என்பதற்காக இந்தத் திட்டத்தை அவர் அறிவித்திருக்கிறார், அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவருக்கு ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன் என தெரிவித்தார்.