அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.
கட்சியில் முதல்வர், வேட்பாளர் குறித்தும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் புதிய பொதுச்செயலாளர் பதவி உட்பட நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல் நடத்த கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உட்கட்சித் தேர்தல் நடத்தும் வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.