விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாறைகள், எம்சாண்ட் போன்ற கனிமவளங்கள் தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அவ்வாறு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையே விட கூடுதலாக ஏற்றி செல்வதனால் தினசரி வாகன விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக அழகியமண்டபம் அருகில் கல்லுவிளையில் அதிக எடையுடன் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் காயம் அடைந்துள்ளனர். எனவே இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதால் விதிமுறைகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர்கள் போராட்டங்களும், அரசுக்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
இதனால் அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களை அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து விளவங்கோடு தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் துணை தாசில்தார் சுனில்குமார், கூடுதல் வருவாய் ஆய்வாளர்கள் குமார், சிந்துகுமார் போன்றோர் அடங்கிய குழுவினர் மார்த்தாண்டம், குழித்துறை, படந்தாலுமூடு, களியக்காவிளை போன்ற பகுதிகளில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்ததாக 11 கனரக வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து குழித்துறை வி.எல்.சி. மைதானத்தில் நிறுத்தி வைத்துள்ளது.