குரங்கிடம் கடி வாங்கி கடுமையாக காயம்பட்டாலும், தைரியமாக மீண்டும் படப்பிடிப்பில் நடித்த சுவாரஸ்யக் கதை பற்றி கூறியுள்ளார், நடிகை சல்மா ஹயேக்.
குரங்கிடம் கடிவாங்கி காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார், ஹாலிவுட் நடிகை சல்மா ஹயேக். அமெரிக்காவில் பிரபல பத்திரிகையான வோக், 53 வயதாகும் சல்மா ஹயேக்கின் மிகவும் சிறப்பான ஃபேஷன் தருணங்களைக் குறிப்பிடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் 1996ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தனது 13 வித்தியாசமான தோற்றங்கள் குறித்து பேசியுள்ளார்.
இதில், தனது மாறுபட்ட தோற்றங்களின் புகைப்படங்கள் இருக்கும் ஆல்பம் ஒன்றை ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி அந்தப் புகைப்படத்தின் பின்னணி குறித்து விளக்கமளித்துள்ளார். அப்போது, 2002ஆம் வெளியான ஃபிரிடா படத்தின்போது குரங்கிடம் கடிவாங்கிய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படம், 2002இல் ஃபிரிடா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. இதுதான் வோக் பத்திரிகைக்காக முதன்முதலாக எடுக்கப்பட்ட புகைப்படம். இப்படத்தில் இருக்கும் குரங்கின் பெயர் டைசன். ஃபிரிடா படத்தின் படப்பிடிப்பின்போது இந்தக் குரங்கு என்னை தாக்கியதால் கடுமையாக காயம் அடைந்தேன். ஆனால், தைரியம் அதிகமாக இருந்ததால் மீண்டும் படப்பிடிப்பில் பயம் இல்லாமல் கலந்து கொண்டேன்.
மேலும், அந்தக் குரங்குடன் இணைந்து வோக்குக்காக புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்’ என்றார், சல்மா.மெக்சிகோ ஓவியர் ஃபிரிடா கலோ வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியிருந்த ஃபிரிடா படத்தில் நடித்ததற்காக சல்மா ஹயேக் ஆஸ்கர் விருதில் சிறந்த நடிகைக்கான தேர்வில் பரிந்துரை செய்யப்பட்டார்.