ஹிஜாப் அணியாத பெண்ணை காவல்துறையினர் தாக்கிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பிரபல நடிகைக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய நடிகையான தரனே அலிதூஸ்டி நடித்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் மிகவும் பிரபலமானவர் ஆனார். இவர் ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்ணை காவல்துரையினர் கடுமையாக தாக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செயல் அந்நாட்டு அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவானது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தததை தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியில் “தரனே அலிதூஸ்டி சர்ச்சையை ஏற்படுத்தும் வீடியோவை பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்த விவரம் வெளியாகியுள்ளது. லண்டனை சேர்ந்த ஈரானிய சர்வதேச மூத்த ஆசிரியர் பரிபா இதுகுறித்து கூறிய போது, “ஈரானில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஈரான் நாட்டு மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இச்சமயத்தில் தரனே அலிதூஸ்டி கைது செய்யப்பட்டு அடுத்தடுத்து அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருப்பது நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த நாட்டு மக்கள் சமூகவலைதளங்கள் பயன்படுத்துவதை தடுக்க அரசு முயற்சித்து வருவதாக தெரிகின்றது” என கூறியுள்ளார். தரனே அலிதூஸ்டி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தெஹ்ரானில் அரசாங்கத்தை விமர்சனம் செய்தார்.
அதோடு சென்ற வருடம் நவம்பர் மாதம் ஈரான் பாதுகாப்பு படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக தனது சுயவிவரப் படத்தை கருப்பு நிறத்துடன் மாற்றியுள்ளதாக கூறியிருந்தார். அதுமட்டுமன்றி ஈரானியருக்கு விசா வழங்க தடைவிதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.