கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்குவதற்கு தமிழக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது. இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பது உறுதியான நிலையில், தற்போது தனி விமானம் மூலம் அவர் பெங்களூரு சென்றுள்ளார். அங்கு நடிகர் ரஜினியை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வரவேற்றார். மேலும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று மாலை விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.