விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்பதற்கு ஆம்புலன்ஸ் வராததால் கணவன் கண் முன்னேயே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பட்டரவாக்கம் ஆவின் சாலையில் மனோகரன் என்பவர் தனது மனைவி ஜான்சிராணியுடன் மோட்டார் சைக்கிளில் அம்பத்தூர் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஆவின் பால் பண்ணை ஒப்பந்த லாரியானது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜான்சிராணி லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இதனால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். ஆனால் தகவல் தெரிவித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜான்சிராணி கணவன் கண்முன்னேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான தினேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.