பொலிவியா நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்திலிருந்து எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பிய நபரால் மக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.
பொலிவியா நாட்டின் விமான தொழில்நுட்ப வல்லுனரான எர்வின் துரிமி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து ஒன்றில் பயணித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்திற்குள்ளானது. அந்நேரத்தில் எர்வின் துரிமி தன் சமயோகித புத்தியை பயன்படுத்தியதால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார். ஆனால் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளில் 21 நபர்கள் பலியாகியுள்ள நிலையில் பலரும் பலத்த காயம் அடைந்துள்ளார்கள்.
மேலும் அவ்விபத்தினை பற்றி எர்வின் கூறியதாவது, நான் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்தேன் அப்போது சக பயணிகளின் அலறும் சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்தேன். அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி அதீத வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மிக உயரமான பகுதியிலிருந்து பள்ளத்தில் பாய்ந்ததாக கூறியுள்ளார். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொலம்பியா நாட்டை உலுக்கிய விமான விபத்தில் chapecoense கால்பந்து அணியின் பெரும்பாலான வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள் இறந்த நிலையிலும் துரிமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.