மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஐயங்கார் குளம் பகுதியில் மங்கையற்கரசி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு உறவினரான மைதிலி என்ற பெண்ணும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மொபட்டில் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் இவர்களது மொபட் ஐயங்கார்குளம்-மோரணம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர்களின் மொபட்டின் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மைதிலியை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைதிலி, அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். அதோடு மற்றொருவரான மங்கையற்கரசி இந்த விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பித்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.